Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - திருமகளைச் சரண்புகுதல்

திருமகளைச் சரண்புகுதல்

    மாதவன் சக்தியினைச் - செய்ய
          மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்!
    போதுமிவ் வறுமையெலாம் - எந்தப்
          போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே
    வேதனைப் படுமனமும் - உயர்
          வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்
    வாதனை பொறுக்கவில்லை - அன்னை
          மாமக ளடியிணை சரண்புகுவோம்.

    கீழ்களின் அவமதிப்பும் - தொழில்
          கெட்டவ ரிணக்கமும் கிணற்றினுள்ளே
    மூழ்கிய விளக்கினைப் போல் - செய்யும்
          முயற்சியெல் லாங்கெட்டு முடிவதுவும்,
    ஏழ்கட லோடியுமோர் - பயன்
          எய்திட வழியின்றி இருப்பதுவும்
    வீழ்கஇக்கொடு நோய்தான் - வைய
          மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ?

    பாற்கட லிடைப் பிறந்தாள் - அது
          பயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள்;
    ஏற்குமோர் தாமரைப் பூ - அதில்
          இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;
    நாற்கரந் தானுடையாள் - அந்த
          நான்கினும் பலவகைத் திருவுடையாள்!
    வேற்கரு விழியுடையாள் - செய்ய
          மேனியள் பசுமையை விரும்பிடுவாள்.

    நாரணன் மார்பினிலே - அன்பு
          நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்;
    தோரணப் பந்தரிலும் - பசுத்
          தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்,
    வீரர்தந் தோளினிலும் - உடல்
          வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும்
    பாரதி சிரத்தினிலும் - ஒளி
          பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்.

    பொன்னிலும் மணிகளிலும் - நறும்
          பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்,
    கன்னியர் நகைப்பினிலும் - செழுங்
          காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்,
    முன்னிய துணிவினிலும் - மன்னர்
          முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
    பன்னிநற் புகழ்பாடி - அவள்
          பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்.

    மண்ணினுட் கனிகளிலும் - மலை
          வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்,
    புண்ணிய வேள்வியிலும் - உயர்
          புகழிலும் மதியிலும் புதுமையிலும்
    பண்ணுநற் பாவையிலும் - நல்ல
          பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
    நண்ணிய தேவிதனை - எங்கள்
          நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.

    வெற்றிகொள் படையினிலும் - பல
          விநயங்கள் அறிந்தவர் கடையிலும்,
    நற்றவ நடையினிலும் - நல்ல
          நாவலர் தேமொழித் தொடரினிலும்
    உற்றசெந் திருத்தாயை - நித்தம்
          உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்;
    கற்றபல் கலைகளெல்லாம் - அவள்
          கருணை நல்லொளி பெறக் கலிதவிர்ப்போம்.

No comments:

Post a Comment